எழுத்துகள் ஏங்குகின்றன
உன் பெயரை
அடிக்கடி எழுதச்சொல்லி....
நான்தான் எழுதுவதில்லை
ஏன் தெரியுமா?
நீ என் "அந்தரங்கப் பக்கம்"
அதை நான்
ஏன் 'அம்பலப்படுத்த'
வேண்டும்...?

படர்ந்திருந்த தூசியில்
உன் பெயரை எழுதினேன்.....
சுத்தமாக உனது பெயர்....!
அழுக்கானது
என் மனம்....?!

அன்பே,
உன் விழிகள் இரண்டும்
தோட்டாக் குண்டுகளா...?
இல்லை
தோட்டத்து வண்டுகளா..?
என் இதயத்தை
துளைத்து விட்டதே...?

நான் 
கண்ணீர் மழை பொழிய
அவள்-
பரிசளித்தாள் ஒரு காடு...? 
தாடி....!!

பருவம் சுமந்து
நீ....
பவனி வருகையில்
அறிவியல் அதிசயம்....
என்னுள் நடக்கிறது
ஆமாம் பெண்ணே...
என் பத்து விரல்களுக்கும்
பசி எடுக்கிறது....!?

எனக்குத் தெரியும்
என் இதய தோட்டத்தில்
மலரும்
ஒவ்வொரு பூவும்
உனக்கான 
வாழ்த்துக் கவிதைகள்...!

உன் வீட்டு
வெற்றுக்கொடியில்
காய்ந்து கொண்டிருக்கிறது
ஈரமான
எனது பார்வை...!

நீ வரும் வரை
உன்னைத் தேடுகிறேன்
நீ வந்த பிறகு
என்னைத்தேடுகிறேன்...!

அவள்
மின்னலாய் பார்த்தாள்...
இடி விழுந்தது 
என் இதயத்தில்...!

புத்தகங்களில்
புதைந்தேன்
தூக்கம் வந்தது..!
உன்னைப் பார்த்தேன்
தூக்கம் தூரமாய் போனது...!

உன் ஒரவிழிப் பார்வையும்
புன்னகையும்
ஒருமுறையேனும் வீசிவிட்டுப் போ
காலம் முழுமைக்கும்
கவிதைபாட
அதையே
கருப்பொருளாக்கிக் 
கொள்கிறேன்

பெண்ணிடம்
ரகசியத்தைச்
சொல்லக்கூடாதாம்...
அதனால்தான்
கண்ணே..
உன்னைக் காதலிப்பதை
உன்னிடமே
சொல்லவில்லை...!

இனியவளே...
எனக்கும் சிறகுகள்
இருந்தால் உன்
தலைக்கு மேலேயே
பறந்துகொண்டிருப்பேன்
உனக்கு நிழல் தர...!!

பட்ட மரங்கள்
மீண்டும் துளிர்விட்டன..!
ஓ... என்னவள் பேசிய
காதல் மொழிகளை
ஒட்டிக் கேட்டிருக்குமோ
என்னவோ...?

அன்று உன்னிடம் 
சொல்லமுடியாமல்
தவித்தேன்...!
இன்று உன்னை
மறக்க முடியாமல்
தவிக்கிறேன்...!
ஓ... இதுதான் காதலா..?